இடஒதுக்கீடு அமல் - 5
முதலில் டிஸ்கி!
க்ரீமி லேயர் வரையறுப்பு, பிற்படுத்தப்பட்டவரில் ஒரு சிறு பிரிவினரே (சில சாதியினரே அதிகமாக) இடஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து வருவது போன்றவை குறித்து என்னிடம் தீவிரமான கருத்துகள் இருந்தாலும், OBC இடஒதுக்கீடு தேவையற்றது என்ற நிலைப்பாடு என்னிடம் இல்லை. மேலும், இவ்வளவு ஆண்டுகள் இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தும், தாழ்த்தப்பட்டவர் உரிய சமூக நீதி பெற, அது பெரிதாக உதவவில்லை என்பது நிதர்சனம். அது ஏன் என்ற எந்த ஆய்வும் சரியாக செய்யப்படுவதுமில்லை, யார் ஆட்சியில் இருந்தாலும்!
OBC இடஒதுக்கீட்டில் அக்கறை காட்டுபவர்கள், இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏன் உரிய பயனளிக்கவில்லை, அவர்களில் பெரும்பான்மையினர் ஏன் இன்னும் அவல நிலையில் உள்ளனர், ஏன் அவர்கள் இன்னும் தீண்டாமையினால், அநியாய வன்முறைகளால் தாக்கப்படுகின்றனர் என்பவை குறித்து, நியாயமாக காட்ட வேண்டிய அக்கறையையும் காட்டுவதில்லை, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இல்லை! ஏனெனில், OBC போல் தாழ்த்தப்பட்டவர், தேர்தலின்போது ஒரு ஓட்டு வங்கியாக மாறுவதில்லை, இது தான் யதார்த்தம்!
இவ்வளவு ஆண்டுகளில், ஒரு பாப்பாப்பட்டியையும், ஒரு கீரிப்பட்டியையும் தலித் உரிமைக்கான எடுத்துக்காட்டுகளாக காட்டுகிறோம் என்றால், மிக நிச்சயமாக, பதவியில் இருப்பவர்கள் கிள்ளிப் போட்ட துரும்புகள் பயனளிக்கவில்லை தானே! இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும், இட ஒதுக்கீடு குறித்து தெளிவான பார்வை, நோக்கம் என்பது கிடையாது. அவ்வப்பொழுது, ஏதாவது ஸ்டண்ட் அடித்து, சமூக நீதிக் காவலர்கள் என்று காட்டிக் கொள்வது அவசியம். Reservation has clearly become a political game of one-upmanship! எந்த அரசியல்வாதியாவது, என் குடும்பத்தினருக்கோ நெருங்கிய உறவினருக்கோ இட ஒதுக்கீடு வேண்டாம் என்று வெளிப்படையாக கூறிக் கேள்விப்பட்டிருக்கிறோமா???? இதுவும் யதார்த்தம்!
இப்போது சுப்ரீம் கோர்ட் எழுப்பிய வினாக்கள், சந்தேகங்கள் குறித்து: (கோர்ட்டுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அரசுக்கு வேண்டியது, கோர்ட் பிரச்சினையின்றி 27% இடஒதுக்கீடை அமல்படுத்துவது)
1. எதற்காக 1931-ஆம் ஆண்டு பழைய சென்ஸசை வைத்து OBC-க்களை வகைப்படுத்த வேண்டும் ? கோர்ட் இந்த கேள்வியை எழுப்பும் என்று அரசு தரப்புக்குத் தெரியாதா? தடை வந்தால் பரவாயில்லை என்று தெரிந்தே செய்த மாதிரி தோன்றுகிறது! சமூக நீதியில் உண்மையான அக்கறை உள்ள அரசு, லேட்டஸ்ட் சென்ஸஸ் பட்டியலை (இருக்கிறதா என்று தெரியவில்லை) கோர்ட்டில் காட்டியிருக்க வேண்டாமா ? அல்லது (குழலி கூறுவது போல) உயர்கல்வி நிறுவனங்களில் எவ்வளவு இடங்களை (மக்கட்தொகையில் சிறிய சதவிகிதத்தில் உள்ள) உயர்சாதியினர் ஆக்ரமித்துள்ளனர் என்று புள்ளி விவரங்களோடு முதலிலேயே காட்டியிருக்க வேண்டாமா?
2. அது போலவே, கோர்ட் கூறிய, "Reservation cannot be permanent and appear to perpetuate backwardness" என்பதற்கு அரசுத் தரப்பில் பதில் இருந்திருக்க வேண்டும். அதாவது, அடுத்த ஒரு 30 ஆண்டுகள் 27% இடஒதுக்கீடு அமலில் இருக்கும் பட்சத்தில், இந்தந்த அளவில் பிற்படுத்தப்பட்டவர் முன்னேற்றம் ஏற்படும் என்று data தயாரித்திருக்க, அரசுத் தரப்பால் நிச்சயம் முடியும், ஆனால் செய்யவில்லை! அது போலவே, உயர்கல்வி நிறுவனங்களில் (இடங்களைக் கூட்டுவதால்) Infrastructure development குறித்த கருத்துகளை தெளிவாக முன் வைத்திருக்க வேண்டும். ஒரு 30 ஆண்டுகள் கழித்து, 27% இடஒதுக்கீடு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் வாக்கு தருவதில் எதுவும் குடிமுழுகப் போவதில்லை!!!
3. அது போலவே, க்ரீமி லேயரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்காமலேயே, 27%-இல் ஒரு 9% OBC-யில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அளிக்கப்படும் என்று அரசு, க்ரீமி லேயர் விஷயத்தில் middle path எடுத்திருக்கலாம்!
மேற்கூறியவை, நீதிமன்ற விவாதங்களின்போது, அரசு தரப்புக்கு வலு சேர்த்திருக்கும் என்று தோன்றுகிறது. சரியான homework செய்யாமல், இப்போது கூப்பாடு போடுவதில் எந்த பயனும் இல்லை. அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லும்போது, சரியான data மற்றும் இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான சிந்தனை ஆகியவையோடு சென்றால், சரியான முறையில், இடஒதுக்கீடை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது.
இவ்விடயத்தை பற்றிய எனது முந்தைய பதிவுகள்
க்ரீமி லேயர்
இடஒதுக்கீடு அமல்-4
இடஒதுக்கீடு அமல்-3
இடஒதுக்கீடு - உரத்த சிந்தனைகள்
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 320 ***